Sunday, June 12, 2016

வாராக் கடன்களும் தேறா வங்கிகளும்

"கல்விக் கடனால் கலங்கி நிற்கும் மாணவர்கள்"
"கடனை வசூலிக்க வங்கிகள் காட்டும் கெடுபிடி"
"கந்து வட்டி கும்பல் பாணியில் கடன் வசூல்"

இப்படிப்பட்ட தலைப்புகளுடன் தொலை காட்சியில் ஒரு விவாதம் நடந்து நடந்து கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது.

இந்த கூற்றுகள் உண்மையானால் , இந்த மாணவர்களை விட ஒரு நன்றி இல்லாத சமூகம் இருக்க முடியாது!

பல போராட்டங்களுக்குப் பிறகு கல்லூரியில் இடம் 'வாங்கியபின் ' எப்படி வருடா வருடம் கட்டணத்தைச் செலுத்தப் போகிறோம் என்று விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் பொழுது வந்து கை கொடுத்த வங்கிகளை இப்படி நினைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.

இதற்க்கு வங்கிகளும், அவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கும் ஒரு பங்கு உண்டு . சில காலங்களுக்கு முன்,  கடன் வேண்டுபவர்கள் வங்கிக்குப் போய் வரிசையில் நின்று வேண்டுவார்கள் . ஆனால் இன்றோ அண்ணா பல்கலைக்கழகத்துக்குள்ளேயே வங்கிகள் வரிசையில் நிற்கின்றன .

இந்த அழகில் "வாங்கிய கல்விக்  கடனை கட்டவே தேவை இல்லை" போன்ற தேர்தல்  வாக்குறுதிகளும் அள்ளி  வீசப்படுகின்ற இந்தச் சூழ்நிலையில், கடனைத் திருப்பிக் கட்டலாம் என்ற எண்ணத்தில் உள்ளவனும் தயங்கி நிற்கிறான்.

போதாக்குறைக்கு 'ஆயிரக் கணக்கான கோடிகளைக் கடனாக வாங்கியவனை வெளிநாட்டுக்குப் போக விட்டு விட்டு இப்படிப்பட்ட ஏழைகளை மட்டும் குறி வைக்கிறார்கள்' என்று வங்கிகளை வசை பாடுகிறார்கள்.

இப்படி தொலைக் காட்சியிலும் தெரு மூலைகளிலும் கூவி விற்றால் எப்படித் திருப்புவார்கள் ?

அரசியல் அழுத்தத்தில் கடன் கொடுத்த வங்கிகளும் , கடனை குனிந்து வாங்கிக் கொண்டு, பின் நிமிர்ந்து நடக்கும் கடனாளிகளும் எக்கேடோ கெட்டு போகட்டும். இதற்க்கெல்லாம் நடுவில் மாட்டிக் கொண்டு தவிக்கும் வங்கி மேலாளர்களின் பாட்டை யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா??

கொடுத்தவைகள் வாராக் கடனாகி விட்டது என்று வேலையிலிருந்து ஒய்வு பெறுவதற்க்கு சில நாள்கள் முன்தான் விழித்துக் கொண்டது போல் ஒரு ஓலை அனுப்பி , ஓய்வு காலத்திற்கென்று நம்பிக் கொண்டிருக்கும் நாற்பது வருஷங்களாக சிறுக சிறுக சேமித்த பணத்தைக் கொடுக்காமல் போதாக் குறைக்கு தாற்காலிகப் பணி நீக்கம் வேறு செய்து விடுகிறார்கள் . இந்த மேலாளர்கள் என்ன ஆசைப்பட்டா இந்தக் கடன்களைக் கொடுத்தார்கள் - 'ஏன் கொடுக்கவில்லை' என்ற அழுத்தத்திலே கொடுக்கப் பட்டவைகள்தானே , இப்பொழுது வாராமல் போய்க் கொண்டிருக்கிறது !

வங்கி அதிகாரிகளின் பாடு இப்படி கேவலப் பட வேண்டாம் - கேட்பாரற்று போன இவர்களுக்கு உறுதுணையாக இருந்த சங்கங்களும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன .

இப்படிப்பட்ட விவாதங்களினால் வரும் விளைவுகளால் இன்றைய தொலைகாட்சிகள் நாட்டுக்கு  நல்லது செய்வதா இல்லையா என்று மற்றொரு விவாதம் கூடிய சீக்கிரம் வரும் என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment